9 பேரிடம் விசாரித்தும் குற்றவாளிகள் அடையாளம் தெரியவில்லை, சிறுமி கொலை குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் - போலீசார் அறிவிப்பு
சிறுமி கொலையில் 9 பேரிடம் விசாரித்தும் குற்றவாளிகள் அடையாளம் தெரியவில்லை என்பதால் இந்த கொலை குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
துடியலூர்,
கோவை துடியலூர் அருகே 1-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி திடீரென்று மாயமானார். பின்னர் மறுநாள் தனது வீட்டின் அருகே அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு ஒரு பனியனும் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்டு இருப்பது தெரியவந்தது.
இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் மறியலில் ஈடுபட்டனர். அதுபோன்று துடியலூர் பஸ்நிறுத்தம் முன்பும் மறியல் நடந்தது.
இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் குற்றவாளிகளை கைது செய்யும்வரை போராட்டத்தை வாபஸ்பெற மாட்டோம் என்று உறுதியாக கூறினார்கள்.
இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அதேப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதை சிறுமியின் உறவினர்களிடம் கூறிய போலீசார், 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதையும் வீடியோ மூலம் காட்டினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சிறுமியின் உடலை வாங்கிச்சென்றனர்.
தொடர்ந்து பிடிபட்ட 6 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றவாளிகள் குறித்த உறுதியான தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 6 பேரிடமும் தொடர்ந்து தனிப்படைகளை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை, பாலியல் வன்புணர்ச்சி செய்தல், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அத்துடன் இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சிறுமி மாயமான அன்று அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் அந்த சிறுமி வசித்து வந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் வைத்திருந்த செல்போன்களில் அந்த சிறுமியின் புகைப்படம் இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தோம். அதில் அந்த புகைப்படம் சிறுமி உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்டது ஆகும். 2 பேரில் ஒருவர் அந்த சிறுமியை புகைப்படம் எடுத்து மற்றொருவருக்கு அனுப்பி உள்ளார்.
எனவே அவர்கள் 2 பேரும் வேறு யாருக்காவது சிறுமியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதுபோன்று அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 9 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால் குற்றவாளிகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. தொடர்ந்து தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் சிறுமி கொலை குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் நோட்டீசு அடித்து பொது மக்களிடம் வினியோகம் செய்து வருகிறார்கள்.
அந்த நோட்டீசில், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இந்து முன்னணி சார்பில் துடியலூர் போலீசில் அளித்த புகாரில், சிறுமி கொலை தொடர்பாக இந்து முன்னணியை தொடர்புபடுத்தி சிலர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story