பொள்ளாச்சி விவகாரத்தில் நாளைக்குள் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன்


பொள்ளாச்சி விவகாரத்தில் நாளைக்குள் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன்
x
தினத்தந்தி 28 March 2019 10:30 PM GMT (Updated: 28 March 2019 6:19 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நாளைக்குள் (சனிக்கிழமை) ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோவை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை முகநூல் மூலம் காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்கள் வாழ்க்கையை சீரழித்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து உள்ளது. தற்போது அவர்கள் 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதில் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து போலீசார் பார் நாகராஜ், பொள்ளாச்சி தி.மு.க. நகர மாணவர் அணி அமைப்பாளர் தென்றல் மணிமாறன் (வயது 27) ஆகியோரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்கள். இதை யடுத்து அவர்கள் 2 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் நக்கீரன் கோபால் சில வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். எனவே அந்த வீடியோக்கள் எப்படி கிடைத்தது? என்பது தொடர்பாக கடந்த 25-ந் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் ஆஜராக வில்லை.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக கிடைத்த வீடியோக்கள் தொடர்பாக 30-ந் தேதிக்குள் (நாளைக்குள்) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. எனவே அவர் நாளைக்குள் (சனிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும் போது, பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தென்றல் மணிமாறன், திருநாவுக்கரசின் முகநூல் நண்பர் ஆவார். எனவே அவரிடம் சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதுபோன்று பார் நாகராஜிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. 2 பேருமே முழு ஒத்துழைப்பு கொடுத்து பதிலளித்தனர்.

அதுபோன்று நக்கீரன் கோபாலும் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என நம்புகிறோம் என்றனர்.

Next Story