100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி வினியோகம் செய்யும் பணியை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.
தேனி,
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று முதல் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது. தேனி பங்களாமேட்டில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் குடோனில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.
சிலிண்டர் வினியோகம் செய்யும் போது தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக தேனி நகர் பகுதிகளில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் கள் வினியோகம் செய்யும் 4 நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை சிலிண்டர்களில் ஒட்டி வினியோகம் செய்யப்படும்.
இதுமட்டுமின்றி வினியோகம் செய்யப்படும் வீடுகளின் கதவுகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் 5 ஆயிரம் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. இதேபோல், ஆவின் நிறுவனம் மூலம் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் தேதியை அச்சிட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
பிரபல வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது வழங்கப்படும் ரசீதுகளிலும், தேர்தல் தேதியை குறிப்பிட்டு விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய சீல் வைத்து வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story