கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகி விட்டது கி.வீரமணி பேச்சு


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகி விட்டது கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 4:45 AM IST (Updated: 29 March 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகி விட்டது என்று, மன்னார்குடியில் கி.வீரமணி கூறினார்.

மன்னார்குடி,

மன்னார்குடியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சித்தமல்லி சோமசுந்தரம், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கால்பந்தாட்டத்தில் வெற்றி வாய்ப்பு கை நழுவிப் போய்விடும் என தெரிந்தவுடன் பந்தை விட்டுவிட்டு எதிராளிகளின் காலை உதைப்பதுபோல மக்களவை தேர்தலில் பா.ஜனதா கட்சியின் தோல்வி உறுதி என்பதை உணர்ந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசார கூட்டங்களில் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் செலுத்தப்படும் என மோடி அளித்த வாக்குறுதி என்னஆனது? விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும் என்றார்கள். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பா.ஜனதாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தனக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, மாநில மாணவரணி செயலாளர் சோழராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story