மயிலாடுதுறையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்


மயிலாடுதுறையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 28 March 2019 10:45 PM GMT (Updated: 28 March 2019 7:04 PM GMT)

மயிலாடுதுறையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

மயிலாடுதுறை,

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிமேடைகளை அகற்றிவிட்டு வருகிற 1-ந் தேதி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் அறிவுரையின்படி மயிலாடுதுறை பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு, தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தையல்நாயகி, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர் அமைப்பு அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர்கள் கணேசரெங்கன், ரகுநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கச்சேரிரோடு, பட்டமங்கலத்தெரு, காந்திஜி ரோடு, கூறைநாடு, திருவாரூர் ரோடு, சின்னக் கடைவீதி உள்ளிட்ட சாலைகளில் அனுமதி பெறாமல் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வைத்து இருந்த கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள், தொழிற்சங்கத்தை சேர்ந்த கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவைகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

அப்போது நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கொடிக்கம்பங்களை உடனுக்குடன் அந்த இடத்தை விட்டு அகற்றினர். இதனால் மயிலாடுதுறையில் உள்ள முக்கிய சாலைகளில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Next Story