குன்றத்தூரில் குடோனில் பதுக்கிய ரூ.2½ கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்


குன்றத்தூரில் குடோனில் பதுக்கிய ரூ.2½ கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2019 3:45 AM IST (Updated: 29 March 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை துறைமுகத்திற்கு கடந்த 19-ந் தேதி ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த கன்டெய்னர் லாரியை சுங்கத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள். ஆனால் அதன் பின்னர் அந்த கன்டெய்னர் லாரி திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கன்டெய்னர் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கண்டுபிடித்து தரும்படி போலீசிடம் தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் குன்றத்தூர் பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்தனர்.

இதில் குன்றத்தூர், கீழ்மா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு கன்டெய்னர் லாரி வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரி சுனில்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த குடோனை திறந்து சோதனை செய்தனர். அதில் அதிக அளவில் செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்தபோது காஞ்சீபுரத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு ரசாயன பொருட்கள் இறக்கி வைக்க வேண்டும் என்று கூறி இந்த குடோனை வாடகைக்கு எடுத்து விட்டு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ரஜினிகாந்தை தேடி வருகின்றனர். மேலும் தற்போது 5 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதும், அதன் மதிப்பு ரூ.2½ கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்து விட்டு அந்த கன்டெய்னர் லாரியை தேடி வருகின்றனர்.

Next Story