“மோடி அரசை அகற்ற வேண்டும்” காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் பேச்சு


“மோடி அரசை அகற்ற வேண்டும்” காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திரமோடி அரசை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் கூறினார்.

சுசீந்திரம்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து எச்.வசந்தகுமார் தினமும் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அதே போல நேற்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுசீந்திரம், கற்காடு, அக்கறை, கடைக்கிராமம், புதுகிராமம், தேரூர், நல்லூர், அமராவதிவிளை, மருங்கூர், குலசேகரன்புதூர் மற்றும் ஆண்டார்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். மேலும் கற்காட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னதாக சுசீந்திரத்தில் அவர் பேசியபோது கூறியதாவது:-

தொழிற்சாலைகள் கொண்டு வர கூடாது என்று நான் சொல்வதாக கூறுகிறார்கள். நானும் தொழில் செய்பவன் தான். தொழிற்சாலைகள் நிறைந்தால் தான் வேலைவாய்ப்பு பெருகும் என்பதும், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதும் எனக்கும் தெரியும். அதே சமயத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழும் இடங்களையும், இயற்கையையும் அழித்து தொழிற்சாலை அமைக்க நான் ஒருபோதும் முயற்சி செய்ய மாட்டேன். எனவே தொழிற்சாலைகள் வேண்டாம் என்று நான் கூறவில்லை.

இதே போல குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்று தான் சொல்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஏழை இந்து மாணவர்களுக்கு பண உதவி செய்வோம் என்று கூறியும், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து இருக்கிறது.

ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 1500 பேருக்கு நான் வேலை வாய்ப்பு தந்துள்ளேன். மக்களுக்காகத்தான் அரசே தவிர அரசுக்காக மக்கள் அல்ல. எனவே ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்த பிரதமர் நரேந்திரமோடி அரசை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் எச்.வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வும் மக்களிடம் ஓட்டு கேட்டார்.

இதில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தாமரை பாரதி நிர்வாகிகள் முத்து, மாடசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story