“குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியதால் அக்காளை கொன்றேன்” கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம்
“குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியதால் அக்காளை கொன்றேன்” என்று கைதான தம்பி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
நெல்லை,
“குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியதால் அக்காளை கொன்றேன்” என்று கைதான தம்பி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
புதுப்பெண் கொலை
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் கனிமொழி (வயது 25). பி.இ.பட்டதாரி. மகன் சுந்தரபாண்டியன் (20). இவர், நெல்லை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
கனிமொழிக்கும் ஏர்வாடியை சேர்ந்த லெனின் என்பவருக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று தாய் வீட்டுக்கு கனிமொழி வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தூங்கி கொண்டு இருந்த கனிமொழியை அவரது தம்பி சுந்தரபாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர், அரிவாளுடன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைது செய்தார். அப்போது சுந்தரபாண்டியன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனது அக்காள் கனிமொழியின் திருமணம் கடந்த மாதம் சிறப்பாக நடந்தது. மாப்பிள்ளை லெனின் லாரி டிரைவர். இதை தெரிந்து தான் எனது அக்காள் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று அக்காள் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். தொடர்ந்து எனது அக்காளை சமரசம் செய்து மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்தோம். 10 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, நான் அவருடன் வாழ மாட்டேன் என மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார். இது எங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், அக்காளை வெட்டி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் சுந்தரபாண்டியனை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story