இந்தியாவுக்கு வரும் பிரச்சினைகளை மல்யுத்த வீரராக மோடி தடுத்து வருகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


இந்தியாவுக்கு வரும் பிரச்சினைகளை மல்யுத்த வீரராக மோடி தடுத்து வருகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 29 March 2019 3:15 AM IST (Updated: 29 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு வரும் பிரச்சினைகளை மல்யுத்த வீரராக மோடி தடுத்து வருகிறார் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் நடந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் சீட் கிடைக்கும். ஜெயலலிதா இருந்த போதே ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஜனநாயக கூட்டணி. தி.மு.க. ரவுடி கட்சி. நடிகர் ராதாரவியை சமயம் பார்த்து மு.க. ஸ்டாலின் பழிவாங்கி விட்டார்.

தி.மு.க.வில் 3-வது தலைமுறையாக மு.க.ஸ்டாலினின் மகன் அரசியலுக்கு வந்துள்ளார். இனி அவர்கள் வீட்டில் இருக்கும் எல்லோரையும் கொண்டு வந்து விடுவார். அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டி.டி.வி. தினகரனுக்கு கண்டிப்பாக பொதுச்சின்னம் கிடைக்காது. தேர்தல் கமிஷனில் ஒரு மாதத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டும். சட்டத்தை யாராலும் வளைக்க முடியாது. அப்படி அந்த சின்னம் வழங்கினால் அது ஒரு தவறான முன்மாதிரியாக போய்விடும். எத்தனை காலத்திற்கு தான் டி.டி.வி. தினகரன் அவரது தொண்டர்களை ஏமாற்றுவார் என்று பார்ப்போம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் யாராவது தொழில் செய்ய முடிந்ததா? ஒரு பத்திரம்தான் பதிய முடியுமா? கவுன்சிலர்கள் அடாவடி வசூல் செய்வார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைதி நிலவுகிறது. அப்படி எதாவது தவறு நடந்தாலும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது தி.மு.க. ஆட்சி. தடையை நீக்கியது அ.தி.மு.க. ஆட்சி. மோடியை டாடி எனக் கூறுவதில் தவறில்லை. இந்திரா காந்தியை அன்னை என கூறவில்லையா, நாங்களும் இந்திராவை அன்னை என்று தானே கூறுகிறோம்.

மோடி வில்லன் என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு தான் மோடி வில்லனாக தெரிவார். மோடிதான் இந்த நாடாளுமன்ற தேர்தலின் கதாநாயகன். இந்தியாவின் கதாநாயகன். இந்தியாவை பாதுகாக்கும் ஸ்டண்ட் மாஸ்டர். இந்தியாவிற்கு பிரச்சினை என்று சொன்னால் அதை மல்லுக்கட்டி தடுக்க கூடிய மல்யுத்த வீரர். அவரை எதிர்க்க கூடிய சமூக விரோதிகளுக்கு அவர் வில்லனாக தெரிகிறார். வன்முறை, தீவிரவாதம் இல்லாத இந்தியா வேண்டும் என்றால் மோடி தான் பிரதமராக வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிறகு மோடி தான் இந்தியாவின் இரும்பு மனிதராக உள்ளார்.

கனிமொழி வெற்றி பெற வேண்டும் என அவரது தாயார் கோவிலில் வேண்டுவது பாராட்டுக்குரியது. ஒரு நம்பிக்கையோடு வேண்டுகிறார். கருணாநிதியின் மனைவியே வேண்டுகிறார் என்றால் திருப்புமுனை தான். கடவுள் இல்லை என ஸ்டாலின் ஏமாற்று வேலை செய்கிறார். அ.தி.மு.க.வை யாரிடமும் அடகு வைக்கவில்லை. யாரிடமும் விற்கவில்லை. அ.தி.மு.க.வை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story