40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி உறுதி, அ.தி.மு.க.-தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி உறுதி, அ.தி.மு.க.-தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 28 March 2019 9:45 PM GMT (Updated: 28 March 2019 8:34 PM GMT)

அ.தி.மு.க.-தே.மு.தி.க. ராசியான கூட்டணி. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று இரவு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்து உள்ளோம். தி.மு.க.கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க முடியவில்லை. தி.மு.க. ஊழல் கட்சி. எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. விவசாயிகளின் கூட்டணி. மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நதிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர் என்பது எங்களுக்கு தெரியும். மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரி குறித்து மறு பரிசீலனை செய்து வரியை குறைக்க வலியுறுத்துவோம். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுடன், கூட்டணியில் உள்ள தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். சட்டசபையில் விஜயகாந்திற்கும், ஜெயலலிதாவிற்கும் மோதல் ஏற்பட தி.மு.க.தான் சூழ்ச்சியே காரணம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் சினிமா துறையில் இருந்து அரசியலில் வெற்றி கண்டார்கள். கோடநாடு கொலை வழக்கில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி ஸ்டாலின் பேசுகிறார். இது பழிவாங்கும் நோக்கமாகும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இதன் மூலம் இதுபோன்ற சம்பவம் மீண்டும் எங்கும் நடக்காது. எங்கள் கூட்டணி பெண்களுக்கு பாதுகாப்பாக விளங்கும்.

அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமைந்து விடக்கூடாது என்று தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா, விஜயகாந்த் இணைந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் தொடர்ந்து உள்ளது. இந்த கூட்டணி ராசியான கூட்டணி. மகத்தான கூட்டணி. பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேரடியாக மோதுகிறது. பொள்ளாச்சி தொகுதி வளர்ச்சிக்கு மகேந்திரன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். விட்டுப்போன பணிகளை மீண்டும் நிறைவேற்ற மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் மகேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும். எங்கள் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசார கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தாமோதரன், அ.தி.மு.க. பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story