மதுரையில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கற்பழித்து கொலை? போலீசார் தீவிர விசாரணை


மதுரையில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கற்பழித்து கொலை? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 29 March 2019 5:00 AM IST (Updated: 29 March 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை, 

மதுரை ஒத்தக்கடை திருமோகூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கவுசல்யா (வயது 22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கவுசல்யா தனது வீட்டின் முன்பு பல சரக்கு கடை வைத்திருந்தார். நேற்று முன் தினம் இரவு முருகன் பணிக்கு சென்று விட்டார். எனவே அந்த பகுதியில் நடந்த திருவிழாவில் கவுசல்யா கலந்து கொண்டுவிட்டு இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் கவுசல்யாவின் கடை திறக்கவில்லை. எனவே கடைக்கு வந்தவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது கவுசல்யா தரையில் எவ்வித அசைவும் இன்றி படுத்து கிடந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து கதவை திறந்து உள்ளே பார்த்த போது கவுசல்யா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுசல்யா கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை.

சம்பவத்தன்று இரவு நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக அவர் நகைகளை அணிந்து சென்று இருக்கிறார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கவுசல்யா பின்னாலேயே வந்து அவரை கொலை செய்து விட்டு நகையை எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, பிரேத பரிசோதனையின் முடிவில் தான் இது குறித்து தெரியவரும் என்றனர்.

இதற்கிடையில் கவுசல்யாவின் கணவர் முருகன் மற்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள், உறவினர்கள் மற்றும் கடைக்கு அடிக்கடி வந்து செல்பர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story