எதிர்க்கட்சிகளை மிரட்டவே வருமான வரி சோதனை கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பிரதமர் மோடி முயற்சி குமாரசாமி குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளை மிரட்டவே வருமான வரி சோதனை கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பிரதமர் மோடி முயற்சி குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பிரதமர் மோடி முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

பெங்களூரு, 

நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பிரதமர் மோடி முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

தர்ணா போராட்டம்

கர்நாடகத்தில் நேற்று சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜு வீடு உள்பட சுமார் 15 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை கண்டித்து பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை மிரட்டும் நோக்கத்தில் பிரதமர் மோடி, வருமான வரி துறையினரை ஏவி விட்டுள்ளார். மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும், அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

விஞ்ஞானிகள் சாதனை

வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன், மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். விண்வெளியில் செயற்கைகோள் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இது விஞ்ஞானிகள் செய்த சாதனை ஆகும். ஆனால் இதை தான் செய்தது போல் மோடி தொலைக்காட்சியில் தோன்றி தம்பட்டம் அடித்துக் கெள்கிறார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். எதிர்க்கட்சிகளை இலக்காக கொண்டு வருமான வரி சோதனை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

கூட்டாட்சி தத்துவம்

பொதுவாக வருமான வரி சோதனை நடக்கும்போது, பாதுகாப்புக்கு மாநில போலீசாரை பயன்படுத்துவது தான் வாடிக்கை. ஆனால் இந்த முறை மத்திய போலீஸ் பாதுகாப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மோடி முயற்சி செய்கிறார். மத்திய-மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால் மோடியின் தவறான செயல்பாடுகளால், மத்திய-மாநில அரசுகள் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

28 தொகுதிகளிலும் வெற்றி

கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் ரூ.20 கோடி, ரூ.30 கோடி கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள். ஊழல் செய்யாமல், அந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?. நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். இதன் மூலம் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா நிர்வாகி ஒருவர், எதிர்க்கட்சிகளின் வீடுகளில் சோதனை நடத்துவது குறித்து விவரங்களை அமித்ஷாவுக்கு அனுப்புகிறார். அதுபற்றி அமித்ஷா வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார். அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.

விசாரணை அமைப்புகள்

எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டும் கீழ்மட்ட அரசியலை மோடி செய்கிறார். நாட்டில் உள்ள முக்கியமான அரசு நிறுவனங்கள், விசாரணை அமைப்புகளை மோடி அழித்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவினர் கொடுக்கும் இந்த நெருக்கடிகளை நாம் சவாலாக ஏற்று அதை சந்திக்க வேண்டும்.

இது ஒரு அடையாள போராட்டம் தான். எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்தும் செயல்களில் தொடர்ந்து செயல்பட்டால், வருமான வரித்துறைக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story