போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயற்சி ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்
பெங்களூருவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
வாலிபர்களை கொல்ல முயற்சி
பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனீஸ்வரா பிளாக்கை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 25) மற்றும் சுதீப்(23). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். கடந்த 26-ந் தேதி இரவு முனீஸ்வரா பிளாக்கில் உள்ள மைதானத்தில் சந்தோசும், சுதீப்பும் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்தோஷ், சுதீப் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதில், படுகாயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து நந்தினி லே-அவுட் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். போலீஸ் விசாரணையில், சந்தோஷ், சுதீப்பை தாக்கியது லக்கரேயை சேர்ந்த ரவுடியான முனிராஜ் என்ற முன்னா, அவரது கூட்டாளிகள் என்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
போலீஸ்காரரை கத்தியால்...
இதையடுத்து, முனிராஜ், அவரது கூட்டாளிகளை பிடிக்க நந்தினி லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகித் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாா், ரவுடி முனிராஜை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் நந்தினி லே-அவுட், கோலிநகர் அருகே புத்தனகெரே பகுதியில் ரவுடி முனிராஜ் சுற்றித்திரிவதாக இன்ஸ்பெக்டர் லோகித்துக்கு தகவல் கிடைத்தது.
உடனே லோகித், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். புத்தனகெரேயில் உள்ள பூங்கா அருகே ரவுடி முனிராஜை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் முனிராஜை போலீஸ்காரர் பசவராஜ் என்பவர் பிடிக்க முயன்றார். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் பசவராஜை, முனிராஜ் குத்தினார். இதில், அவரது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது.
ரவுடியை சுட்டுப்பிடித்தனர்
இதையடுத்து, வானத்தை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சரண் அடைந்து விடும்படி முனிராஜை, இன்ஸ்பெக்டர் லோகித் எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி ஓடவும் முனிராஜ் முயற்சித்தார்.
உடனே இன்ஸ்பெக்டர் லோகித் முனிராஜை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில், முனிராஜின் காலில் குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, முனிராஜை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
9 வழக்குகள்
பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முனிராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, காயமடைந்த போலீஸ்காரர் பசவராஜிம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணையில், முன்விரோதம் காரணமாக சந்தோஷ், சுதீப் ஆகியோரை முனிராஜ் கொலை செய்ய முயன்றது தெரிந்தது. முனிராஜ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில், காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த வன்முறையின் போது வாகனங்களுக்கு தீவைத்ததாகவும் முனிராஜ் மீது வழக்கு உள்ளது. கைதான முனிராஜ் மீது நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முனிராஜின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story