தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 March 2019 11:00 PM GMT (Updated: 28 March 2019 9:44 PM GMT)

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி,

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது40). இவர் கடந்த 11-ந் தேதி அரியமங்கலம் மர அறுவை ஆலை அருகே நடந்து சென்றார். அப்போது, அவரை அரியமங்கலம் மேலஅம்பிகாபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(29), அதே பகுதியை சேர்ந்த தினேஷ்(24) மற்றும் செந்தண்ணீர்புரத்தை சேர்ந்த விவேக்(29) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1,000 பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் சிலம்பரசன் பிரபல ரவுடி ஆவார்.

கைதான சிலம்பரசன் ஏற்கனவே அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் 12 வழக்குகள், விருத்தாசலம் ரெயில்வே போலீசில் 1 வழக்கு என மொத்தம் 13 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சிலம்பரசன் மீது தொடர்ந்து குற்ற வழக்குகள் உள்ளதால், அவரை ஓராண்டு ஜாமீனில் வெளிவராத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிக்கு சிபாரிசு செய்தார். அதை அவர் ஏற்று, சிலம்பரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள லூர்து நகரை சேர்ந்தவர் அறிவழகன்(47). இவர் கடந்த 13-ந் தேதி, ஏர்போர்ட் வள்ளுவர்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டூர் அண்ணாநகர் கொடிமரத்தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான ஜோன்ஸ் ஸ்டீபன் என்ற ஜோன்ஸ்(24), அறிவழகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப் பையில் வைத்திருந்த பணம் ரூ.2,570-ஐ பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோன்சை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான ஜோன்ஸ் மீது ஏற்கனவே, கண்டோன்மெண்ட் போலீசில் அடிதடி வழக்கு ஒன்றும், வழிப்பறி வழக்கு ஒன்றும், அரியமங்கலத்தில் ஒரு வழக்கு உள்பட மொத்தம் 5 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜோன்சை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஏர்போர்ட் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிக்கு சிபாரிசு செய்தனர். அதை அவர் ஏற்று, ஜோன்சை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

Next Story