என்னை வெற்றி பெறச்செய்தால் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் திருநாவுக்கரசர் பேச்சு


என்னை வெற்றி பெறச்செய்தால் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 28 March 2019 11:15 PM GMT (Updated: 28 March 2019 9:51 PM GMT)

என்னை வெற்றி பெறச்செய்தால் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

திருச்சியில் போட்டியிட வேண்டும் என்பதை 2 மாதங்களுக்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன். இந்த முடிவை முதலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் தான் தெரிவித்தேன். பின்னர் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் நேருவிடம் இதுபற்றி கூறினேன். மூன்றாவதாகத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் திருச்சி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தேன். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் எனது மாவட்டத்தை சேர்ந்த புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. எனவே திருச்சி எனக்கு சொந்த தொகுதி போன்றது தான்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நான் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். மக்களவை உறுப்பினராக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக, துணை சபாநாயகராக, மாநில அமைச்சராக, மத்திய மந்திரி என பல பதவிகளை வகித்து இருக்கிறேன். எந்த தேர்தலிலும் நான் செய்ய முடியாத வாக்குறுதிகளை அளித்தது கிடையாது.

நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் மக்கள் பணியாற்றி இருக்கிறேன். திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் உங்கள் சேவகனாக பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். பாய்லர் ஆலையை நம்பி செயல்பட்டு வந்த பல சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தர முயற்சிப்பேன்.

நான் சிறு வயது முதலே பார்க்கிறேன், தமிழகத்தின் இதயம் போன்ற மத்திய பகுதியான திருச்சியில் இதுவரை ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. என்னை வெற்றி பெற செய்தால் புறநகர் பகுதியில் பஸ் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். திருச்சி விமான நிலையத்தை மேலும் விரிவு படுத்துவேன். நீண்டகாலமாக நிறைவேற்றி முடிக்கப்படாமல் உள்ள அரை வட்ட சுற்றுச்சாலை (ரிங் ரோடு) பணிகளையும் விரைவாக முடிக்க பாடுபடுவேன்.

இந்தியாவிலேயே அதிக சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர் நானாகத்தான் இருப்பேன். 7 அல்லது 8 சின்னங்களில் இதுவரை போட்டியிட்டு விட்டேன். நான் ஏதோ வேண்டுதலுக்காகவோ, பிரார்த்தனைக்காகவோ வெவ்வேறு சின்னங்களில் நிற்கவில்லை. அரசியல் சூழலுக்கு ஏற்ப அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜன் மற்றும் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். 

Next Story