திருக்கோவிலூர் அருகே, வாகன சோதனையில் ரூ.3¼ லட்சம் பறிமுதல் - நிலை கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை
திருக்கோவிலூர் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.3¼ லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ஹரிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை நடத்தியதில், ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முருக்கம்பாடியை சேர்ந்த மகாதேவன் (வயது 51) என்பவரிடம் நிலை கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பெங்களூருவில் தனக்கு சொந்தமாக இருந்த இடத்தை விற்றதும், அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை வீட்டில் வைத்து விட்டு, மீதி ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை விழுப்புரத்துக்கு எடுத்து சென்றதும், அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story