திண்டுக்கல் அருகே, தாறுமாறாக ஓடிய முட்டை லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது


திண்டுக்கல் அருகே, தாறுமாறாக ஓடிய முட்டை லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 29 March 2019 4:45 AM IST (Updated: 29 March 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஸ்கூட்டர் மீது மோதி முட்டை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் சிதறி கிடந்த முட்டைகளை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

சின்னாளபட்டி,

கோவையில் இருந்து மதுரைக்கு முட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நெல்லையை சேர்ந்த அய்யப்பன் (வயது 27) என்பவர் ஓட்டினார். நேற்று காலையில் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராமம் அருகே செட்டியப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது செட்டியபட்டி பிரிவை சேர்ந்த மில் தொழிலாளி விமலா (35) என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது லாரி மோதியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. உடனே லாரி டிரைவர் அங்கு இருந்து ஓடி விட்டார். விபத்தில் படுகாயமடைந்த விமலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் லாரியில் இருந்த முட்டைகள் வெளியே விழுந்தன. அவற்றில் சில முட்டைகள் உடைந்து சாலையில் வீணாகியது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த பொதுமக்கள் அங்கு சென்று உடையாத முட்டைகளை வீடுகளுக்கு போட்டி, போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story