உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி கூறும் மு.க.ஸ்டாலின் வழக்கை வாபஸ் பெறாதது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி கூறும் மு.க.ஸ்டாலின் அது தொடர்பான வழக்கை வாபஸ் பெறாதது ஏன் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி விடுத்தார்.
திண்டுக்கல்,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில், பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு ஆதரவாக திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி அமைந்ததும், தி.மு.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்ததும் உடல் நடுக்கமே வந்துவிட்டது. மு.க.ஸ்டாலின் இனிமேல் முதல்-அமைச்சராகவே முடியாது என்ற நிலை உருவாகி பல நாட்கள் ஆகிவிட்டது. நான் மாறி, மாறி பேசுவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
ஒருபக்கம் பிரதமர் நரேந்திரமோடியும், மறுபக்கம் அவரின் பேரனை போல் இருக்கும் ராகுல்காந்தியும் போட்டியிடுகிறார்கள் என்று பேசினேன். ஆனால், மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று நான் பேசியதாக கூறுகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது பற்றி நான் பேசினேன். எந்த நிலையில் நான் அதை கூறினேன், ஏன் அப்படி கூறினேன் என்பதை வெளிப்படையாக பேசினேன். அதில் தவறு இருக்கிறது என்பதற்காக மன்னிப்பு கேட்ட ஜென்டில்மேன் இந்த சீனிவாசன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைத்து நீதிவிசாரணை நடக்கிறது. அதன் முடிவில் உண்மை வெளியே வரப்போகிறது. ஆனால், தான் முதல்- அமைச்சரானதும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க போவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதை அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பி விடுவார்களா?. அவர் முதல்- அமைச்சராக போவதே இல்லை.
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அண்ணா சமாதி அருகே மு.க.ஸ்டாலின் இடம் கேட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மெரினா தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதை, நீதிமன்றம் சுட்டிகாட்டியது. உடனே அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி கூறும் அவர், அதுதொடர்பான வழக்கை இதுவரை ஏன் வாபஸ் பெறவில்லை.
ஊழல் குற்றச்சாட்டுகளை கூறும் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் வழக்கு தொடர வேண்டியது தானே. ஊழலின் மொத்த உருவமே, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான். 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்ததும் கனிமொழி, ராசா மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பரமசிவம் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story