விருத்தாசலத்தில், டோக்கன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டதா? பங்க் ஊழியர்களிடம் சப்-கலெக்டர் விசாரணை
விருத்தாசலத்தில் டோக்கன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டதா? என பங்க் ஊழியர்களிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
விருத்தாசலம்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டோக்கன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்படுவதாக, விருத்தாசலம் சப்-கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-கலெக்டர் பிரசாந்த் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த பதிவேடுகள், பணம், பெட்ரோல் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதில் டோக்கன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்படவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டோக்கன் மூலம் பெட்ரோல் நிரப்பப்படுகிறதா? எனவும் சப்-கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம், டோக்கன் பெற்றுக்கொண்டு வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது? அவ்வாறு நிரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story