தண்ணீரின்றி வறண்டு போன காப்புக்காடு, குடிநீர் தேடி இடம்பெயரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் - விழித்துக்கொள்வார்களா வனத்துறையினர்
தண்ணீரின்றி காப்புக்காடு வறண்டு போனதால், குடிநீர் புக்காடு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்படுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாதூர் கிராமத்தில் தொடங்கி கடலூர் மாவட்டம் வேப்பூர், அடரி, சிறுபாக்கம், மீண்டும் விழுப்புரம் மாவட்டம் நயினார் பாளையம் வரையில் உள்ளது. அதாவது சுமார் 55 கி.மீ. பரப்பளவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. கடலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 40 கிராமங்களையொட்டி இந்த காப்புக் காடு அமைந்துள்ளது.
காப்புக்காட்டில் மான், மயில், அபூர்வ உயிரினமான எறும்பு தின்னி, காட்டுப்பன்றி, நரி, முயல், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவைகளின் தீவனத்திற்காக ஆச்சான், புங்கன், நாவல், கூர்மருது, கண்டமசாலா உள்ளிட்ட ஏராளமான மர வகைகள் மற்றும் தாவரவகைகளும் வனப்பகுதியில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விலகுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் விதமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் இவை தண்ணீரின்றி வறண்டு போகும் என்பதால், அப்போது விலங்குகளுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் 3 இடங்களில மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடும் வகையில் ஜெ.ஜெ வடிவிலான தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்பி வந்தனர்.
இந்த நிலையல் கடந்த 3 ஆண்டுகளாக பருவநிலையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு மழையின் அளவு குறைந்து போனது. இதனால் காப்புக்காட்டில் உள்ள தடுப்பணைகளும் முழுமையாக நிரம்புவதில்லை. கோடை காலங்களில் இவை வறண்டு போய், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, குடிநீருக்காக வனவிலங்குகள் விவசாய நிலங்களை நோக்கி இடம் பெயர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இவ்வாறு காப்புக்காட்டில் இருந்து வெளியேறி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை கடக்கும் போது அந்த வழியாக செல்லும் வாகனத்தில் சிக்கி விலங்குகள் உயிரிழக்கும் பரிதாப நிகழ்வுகளும் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளது. அதோடு குடிநீருக்காக விவசாய நிலப் பகுதிகளுக்கு செல்லும் போது கிணற்றுக்குள் விழுந்தும் அவைகள் பலியாகி வருகின்றன.
தற்போது கோடை காலத்தின் தொடக்க நிலையிலேயே வெயில் வாட்டி வருகிறது. இதனால் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினைகள் தலைதூக்க தொடங்கி விட்டது. மக்கள் சாலைக்கு வந்து போராடி தண்ணீர் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதே நிலைதான் இந்த காப்புக்காட்டிலும் நீடிக்கிறது. அங்குள்ள தடுப்பணைகள் அனைத்தும் வறண்டு போய் காடு தற்போது வறட்சியின் கோரப் பிடிக்குள் சிக்கி இருக்கிறது.
மனிதனாக இருந்தால் வீதியில் இறங்கி போராடலாம். ஆனால் விலங்குகள் என்பதால் அவை கடந்த காலத்தை போன்றே குடிநீர் தேடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை நோக்கி இடம்பெயர தொடங்கி இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பல விலங்குகள் இந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்படும்.
வன விலங்குகளை பாதுகாக்க தனி சட்டம் வகுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது குடிநீர் தேவைக்காக அவைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே இதை தடுத்திட காப்புக்காட்டில் உள்ள ஜெ.ஜெ. தொட்டிகளில் லாரிகள் மூலம் வனத்துறையினர் அவ்வப்போது தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பிற மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பி வன உயிரினங்களின் தாகத்தை வனத்துறையினர் போக்கி வருகிறார்கள். ஆனால் அதுபோன்ற முயற்சியில் இந்த பகுதியில் மட்டும் வனத்துறையினர் இதுநாள் வரையில் ஈடுபடாமல் இருப்பது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. எனவே இனியும் சம்பந்தப்பட்டவனத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் விழிப்புடன் செயல்பட்டு வனவிலங்குகளின் தாகத்தை போக்கி அவற்றை பாதுகாத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
Related Tags :
Next Story