அரியாங்குப்பத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது பொறி வைத்து போலீசார் மடக்கினர்


அரியாங்குப்பத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது பொறி வைத்து போலீசார் மடக்கினர்
x
தினத்தந்தி 29 March 2019 5:23 AM IST (Updated: 29 March 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீசார் பொறிவைத்து மடக்கிப் பிடித்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் பகுதியில் புதுக்குப்பம், வீராம்பட்டினம், மணவெளி, காக்காயந்தோப்பு ஆகிய பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அந்த கும்பலை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் உத்தரவிட்டதன்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் கஞ்சா வியாபாரிகளை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக கஞ்சா பழக்கமுடைய வாலிபர்களை பிடித்து கஞ்சா விற்பவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் மூலம் கஞ்சா வியாபாரிகளை சாதாரண நபர்கள் போல் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அதிகவிலை கொடுத்தாலும் கஞ்சா வாங்க தயாராக இருப்பதாக போலீசார் ஆசை காட்டினர்.

இதை நம்பிய கஞ்சா வியாபாரிகள் அரியாங்குப்பம் பழையபாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வருமாறு கூறினர். இதையடுத்து அங்கு கஞ்சாவுடன் வந்த 3 பேரையும், மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.விசாரணையில் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 21), முதலியார்பேட்டை அருண்குமார் (19), முருங்கப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story