திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசார வாகனம் உதவி கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசார வாகனத்தை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில் பிரசார வாகனத்தை திருவண்ணாமலை உதவி கலக்டர் ஸ்ரீதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பிரசார வாகனம் மூலம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு செயல் அலுவலர் கணேசன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் வண்ண கோலமிட்டனர்.
அப்போது அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம், உறவினர், பொதுமக்களுக்கு எடுத்துரைப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் 5-வது வார்டில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகமாக மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வந்த மகளிர் குழு பணியாளர்கள் சித்ரா, செல்வி ஆகியோரின் பணியினை செயல் அலுவலர் கணேசன் பாராட்டியும் ஊக்கப்பரிசாக சேலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி, பொது சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், அலுவலக உதவியாளர் சுதா, முத்து மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story