திருமலைக்கோடியில் தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டி போராட்டம் பொதுமக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் விஸ்வநாத நகர், சரஸ்வதி நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் வசிக்கும் வீடுகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தியும் எந்தவித பலனுமில்லை. இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த பகுதி மக்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ், அந்த பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தேர்தல் முடிந்தபின் 4 மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை போராட்டக்காரர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றி வைத்திருந்த கருப்பு கொடியை அகற்றினர்.
Related Tags :
Next Story