சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 22 பேர் போட்டி சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 22 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சேலம்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைந்தது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி நடைபெற்றது.
அப்போது பல்வேறு காரணங்களால் 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதனிடையே இந்த வேட்புமனுக்களை திரும்ப பெற 2 நாட்கள் வாய்ப்பளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சுயேச்சையாக போட்டியிட விரும்பிய ராதா என்கிற ராணியும், நேற்று பாலசுப்பிரமணியன், சண்முகம் ஆகியோர் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தனது மனுவை திரும்ப பெற்றதாக சண்முகம் கூறினார்.
அதைத்தொடர்ந்து மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கே.ஆர்.எஸ். சரவணன்(அ.தி.மு.க.), எஸ்.ஆர்.பார்த்திபன்(தி.மு.க.), எஸ்.கே.செல்வம்(அ.ம.மு.க.), பிரபு மணிகண்டன்(மக்கள் நீதி மய்யம்), ராசா(நாம் தமிழர் கட்சி), சடையன்(பகுஜன் சமாஜ் கட்சி), சிலம்பரசன்(தமிழ்நாடு இளைஞர் கட்சி), மோகன்(சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா(கம்யூனிஸ்ட்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர சுயேச்சைகளாக அகமது ஷாஜகான், கலைமன்னன், சிவராமன், சுருளிவேல், தமிழரசன், நடராஜன், பிரவீணா, மணிமாறன், மாதேஸ்வரன், மூர்த்தி காமராஜர், ரவி, ராமச்சந்திரன், ராஜா, ஹரிஹரன் என மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் பீரவீணா என்பவர் மட்டும் பெண் வேட்பாளர் ஆவார். இவர் வக்கீலாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி ஆகியோர் முன்னிலையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் தாங்கள் விரும்பிய சின்னங்களை பெற்றனர்.
ஆனால் ஒரு சில வேட்பாளர்கள் கிரிக்கெட் மட்டை, குக்கர் ஆகிய சின்னங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனால் அந்த சின்னங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story