முதுமலையில் வறட்சி, சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள்
முதுமலையில் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா வருகின்றன.
மசினகுடி,
இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் முதுமலை உள்பட 4 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன. இந்த 4 புலிகள் காப்பகங்களில் முதுமலையில் மட்டுமே அதிக புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. தற்போது முதுமலையில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு புலிகள் வாழ ஏற்ற காலநிலை, உணவு, வாழ்விடம் போன்றவை இருப்பதே முக்கிய காரணம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக லண்டான எனப்படும் களை செடிகள் அதிக அளவில் இருப்பதால் புலிகள் மறைந்து வாழ வசதியாக உள்ளதாக கூறுகின்றனர். இதனிடையே மழை காலத்தில் முதுமலை வனப்பகுதி பச்சை பசேல் என காட்சி அளிக்கும்.
அப்போது புதர்களில் புலிகள், காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் என எந்த வனவிலங்குகள் இருந்தாலும் அவற்றை நாம் எளிதில் பார்க்க முடியாது. ஆனால் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்பதால் முதுமலையில் ஏற்படும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதி பசுமையை இழந்து காணப்படும்.
குறிப்பாக மரங்கள் இலைகள் இன்றி காட்சி அளிக்கும். புதர்களில் உள்ள செடிகளில் இருக்கும் இலைகளும் கீழே விழுந்து விடுவதால், அங்கு வனவிலங்குகள் மறைந்திருந்தாலும் எளிதில் பார்க்க முடியும். இதனால் கோடை காலத்தில் அதிகமான வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் காண முடியும். இந்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் முதுமலையில் கோடை காலம் தொடங்கி கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டுத்தீயும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக புலிகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டுயானைகள் என வனவிலங்குகள் புதர்களில் இருந்து வெளியே வருவதை அடிக்கடி காண முடிகிறது.
காலை அல்லது மாலை நேரங்களில் புலிகள் காப்பகத்துக்குள் அமைக்கப்பட்டு உள்ள சாலை ஓரங்களில் உலா வரும் இந்த வன விலங்குகள் வனத்துறை ஊழியர்களையோ அல்லது சுற்றுலா பயணிகளையோ பொருட்படுத்தாமல் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இவற்றை காணும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுக்கின்றனர்.
வாகன சவாரியின்போது சுற்றுலா பயணிகள் பார்க்கும் புலி, சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை, பார்த்த இடம் மற்றும் நேரம் ஆகிய தகவல்களும் தெப்பகாட்டில் உள்ள முன் பதிவு மையத்தில் தினந்தோறும் எழுதி வைக்கப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உள்ளிட்ட காரணங்களால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
Related Tags :
Next Story