பொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கு, சரண் அடைந்தவரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


பொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கு, சரண் அடைந்தவரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில், சரண் அடைந்தவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

கோவை,

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரை அடுத்து பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியே வந்தது. இதனால் புகார் கொடுத்த மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை செந்தில் (33), வசந்தகுமார் (26), மணிவண்ணன் (25), பார் நாகராஜ் (28), பாபு (26) ஆகிய 5 பேர் வழிமறித்து வழக்கை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பார் நாகராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான மணிவண்ணனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கடந்த 25-ந் தேதி கோவையில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவரை வருகிற 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதை யடுத்து போலீசார் மணிவண்ணனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மணி வண்ணன் ஜாமீன் கேட்டு இதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் கருதினர். எனவே அவரை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதற்காக கோவை மத்திய சிறையில் உள்ள மணிவண்ணனை போலீசார் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகராஜன், மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிவண்ணனை அழைத்துச்சென்று, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story