வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.18¾ லட்சம் தங்கம் பறிமுதல்


வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.18¾ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2019 9:30 PM GMT (Updated: 29 March 2019 8:19 PM GMT)

சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுற்றுலா விசாவில் குவைத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி(வயது 30) என்ற பெண் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகளை கொண்டு சோதனை செய்தனர்.

அதில் பத்மாவதி, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 2 தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 365 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் எடைகொண்ட 4 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 565 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட பெண் உள்பட 2 பேரிடமும் யாருக்காக அந்த தங்கத்தை குவைத் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story