செய்யாறு அருகே பறக்கும் படை சோதனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற ஆசிரியையிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் அடகு வைத்த ஆவணத்தை காண்பித்தும் முழு விவரம் இல்லை என ஏற்க மறுப்பு


செய்யாறு அருகே பறக்கும் படை சோதனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற ஆசிரியையிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் அடகு வைத்த ஆவணத்தை காண்பித்தும் முழு விவரம் இல்லை என ஏற்க மறுப்பு
x
தினத்தந்தி 30 March 2019 3:45 AM IST (Updated: 30 March 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

கையில் ஏற்பட்ட முறிவுக்கு சிகிச்சை பெற ரூ.2 லட்சத்துடன் காரில் சென்ற ஆசிரியை வங்கியில் நகை வைத்து கடன் பெற்றதற்கான ஆவணத்தை காண்பித்தும், முழு தொகைக்கு ஆவணம் இல்லை எனக்கூறி பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

செய்யாறு, 

காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்காரகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். பட்டு நெசவு தொழிலாளி. இவரது உறவினர் தேவிகா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவிகாவுக்கு கையில் முறிவு ஏற்பட்டது. இதனையொட்டி அவர் புத்தூரில் நாட்டுவைத்தியரிடம் கையில் கட்டுப்போட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் கைமுறிவு சரியாகாததால் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற காரில் வந்தார். அவர் கையில் கட்டுடன் இருந்தார்.

இந்த நிலையில் அவரது கார் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்கட்டூர் பெட்ரோல் பங்க் எதிரில் வந்தபோது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரராணி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் ஆசிரியை தேவிகா வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

கை முறிவு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ.2 லட்சத்துடன் செல்வதாக கூறினார். அதற்கு ஆதாரம் இல்லை எனக்கூறி அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்ய முயன்றனர். உடனே தேவிகா, தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வங்கியில் நகை அடகு வைத்து கடன் பெற்ற தொகைக்கான ரசீதை ‘வாட்ஸ் அப்’ மூலமாக பெற்று அதனை காட்டினார்.

அதில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்திற்கான ஆவணம்தான் இருந்தது. மீதம் உள்ள பணத்துக்கு ஆவணம் இல்லை எனக்கூறி ரூ.2 லட்சத்தை அவர்கள் பறிமுதல் செய்து செய்யாறு உதவிக்கலெக்டரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான ஆர்.அன்னம்மாளிடம் ஒப்படைத்தனர்.

இதே போல நேற்று முன்தினம் இரவு செய்யாறில் மாரியப்பன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் மேற்கொண்ட சோதனையில் உரியஆவணமின்றி வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராமத்தை சேர்ந்த இப்ராஹீம் காரில் கொண்டு வந்த ரூ.51 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கத்தை அடுத்த கண்ணக்குருக்கை கிராமம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்காரப்படையை அடுத்த கோடியூரை சேர்ந்த சேட்டு என்ற ஆட்டு வியாபாரி, ஆடு வாங்குவதற்காக செஞ்சி நோக்கி மினிவேனில் சென்று கொண்டிருந்தார்.

அந்த மினிவேனை பறக்கும்படையினர் மடக்கி சோதனை செய்தனர். சேட்டு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 400 வைத்திருந்தார். அவர் ஆடு வாங்க செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லை எனக்கூறி ரூ. 1 லட்சத்து 92 ஆயிரத்து 400-ஐ பறக்கும்படையினர் பறிமுதல் செய்து செங்கம் தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர்.

பறக்கும்படையினர் விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனையில் ஈடுபடுவது பாராட்டிற்குரியதுதான் என்றாலும் பல நேரங்களில் அப்பாவிகளிடமும் ஆவணம் இல்லை எனக்கூறி பணத்தை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களில் பணத்தை இழப்பவர்களிடம் அவர்கள் கூறும் தகவல் உண்மையானதுதானா என கண்டறிந்து விசாரணை நடத்தி உண்மை எனும்பட்சத்தில் பணத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

Next Story