ஆற்காடு அருகே மின்வயர்கள் அறுந்து வீட்டின் மீது விழுந்ததால் பயங்கர தீ 45 பவுன் நகை- பொருட்கள் சேதம்


ஆற்காடு அருகே மின்வயர்கள் அறுந்து வீட்டின் மீது விழுந்ததால் பயங்கர தீ 45 பவுன் நகை- பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 30 March 2019 3:45 AM IST (Updated: 30 March 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே மின்வயர்கள் உராய்ந்து அறுந்து வீடு மீது விழுந்து தீப்பிடித்ததில் 45 பவுன் நகைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஆற்காடு, 

ஆற்காடு தாலுகா ரத்தினகிரியை அடுத்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). விவசாயி. இவர் தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டின் பின்புறம் தகரத்தினால் மேற்கூரை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மேல்புறம் சென்ற மின்சார வயர்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று உராய்ந்ததில் துண்டாகி அறுந்து இவரது வீட்டின் மேல் விழுந்து தீப்பிடித்தது.

தீ மளமளவென பரவியதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2¾ லட்சம், 45 பவுன் நகைகள், பட்டுச்சேலைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் பந்தல் அமைக்க பயன்படுத்தும் துணிகள், இரும்பு மேசைகள், நாற்காலிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.

இது குறித்து ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தது.

நல்ல வேளையாக தீ விபத்து நடந்த வீட்டில் 2 கியாஸ் சிலிண்டர்கள் காலியாக இருந்ததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story