நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 8-ந் தேதி கர்நாடகம் வருகை மைசூருவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருகிற 8-ந் தேதி கர்நாடகம் வருகைதர உள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருகிற 8-ந் தேதி கர்நாடகம் வருகைதர உள்ளார். அன்றைய தினம் மைசூருவில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
பா.ஜனதா தலைவர்கள் கோரிக்கை
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 27 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்திருந்தார்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு பிரசாரம் செய்ய கர்நாடகத்திற்கு பிரதமர் இன்னும் வரவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகத்தில் நடைபெறும் 7 பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் மேலிடத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
8-ந் தேதி மோடி வருகை
இந்த நிலையில், வருகிற 8-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகம் வருகை தர உள்ளார். அன்றைய தினம் அவர் மைசூருவில் நடைபெறும் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மைசூரு-குடகு, சாம்ராஜ்நகர் தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம் செய்கிறார்.
அன்றைய தினம் மைசூருவில் பிரசாரத்தை முடித்துவிட்டு, சித்ரதுர்கா மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். சித்ரதுர்காவில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி கலந்துகொண்டு ஆதரவு திரட்டுகிறார் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story