செந்துறை அருகே லாரி மோதி அண்ணன்-தம்பி பலி டிரைவர் கைது
செந்துறை அருகே லாரி மோதி அண்ணன்-தம்பி பலியாயினர். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஜெமீன்தத்தனூர் கிராமத்தை சேர்ந்த அமாவசை மகன்கள் பரமசிவம் (வயது 50), ராஜலிங்கம் (45). இவர்கள் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இவர்களிடம் செந்துறையை அடுத்த கஞ்சமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை வேட்டக்குடி பகுதியில் பட்டி அமைத்து அதில் அடைத்துள்ளனர். அவற்றின் ஒருபகுதி ஆட்டை நேற்று காலை சரக்கு வேனில் ஏற்றி அணைக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு விட்டனர். மீதமுள்ள ஆடுகளை கொண்டு செல்வதற்காக சரக்கு வேன் முன்னே செல்ல, மோட்டார் சைக்கிளில் 3 பேரும் செந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கீழமாளிகை பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரங்களில் சிக்கி பரமசிவமும், ராஜலிங்கமும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தை சேர்ந்த குமார் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் அண்ணன்-தம்பி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story