ஈரோட்டில் ரவுடி வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோட்டில் ரவுடியை வெட்டிக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரகலாதன் (வயது 30). ரவுடியான இவர் மீது ஈரோடு மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று பிரகலாதன் தன்னுடைய நண்பர்களுடன் ஈரோடு கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். மதுவை வாங்கிய அவர்கள் அங்குள்ள பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பிரகலாதனிடம், ‘தங்களிடம் பேச வேண்டும் வெளியில் வாருங்கள்’ என்று கூறி உள்ளார். இதனால் அவர் எழுந்து வெளியில் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபர் தன்னுடன் வந்த 5 பேருடன் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகலாதனை சரமாரியாக வெட்டத்தொடங்கினர்.
இதனால் வலிதாங்க முடியாமல் பிரகலாதன் அங்கிருந்து தப்பிஓட முயன்றார். எனினும் அந்த கும்பல் துரத்திச்சென்று தலை, முகம், கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் மயங்கிய அவர் ஒரு வீட்டின் முன்பு விழுந்து விட்டார். அதைத்தொடர்ந்து அந்த 6 பேரும் சேர்ந்து பிரகலாதனின் முகம் தெரியாத அளவுக்கு வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்தவர்களில் ஒருவர் ஈரோடு குயிலன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் பிரகலாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று கருங்கல்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.