பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தல் கருத்தரங்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் ‘தவறு நடக்க வாய்ப்பே இல்லை’ தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பேச்சு


பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தல் கருத்தரங்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் ‘தவறு நடக்க வாய்ப்பே இல்லை’ தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 5:00 AM IST (Updated: 30 March 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் “மின்னணு வாக்கு எந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்தார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் “மின்னணு வாக்கு எந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

கருத்தரங்கு

கர்நாடகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

யாருக்கு வாக்களித்தோம்

இந்த கருத்தரங்கை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பேட் எந்திரம் ெபாருத்தப்படுகிறது. இதன் மூலம் வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உடனே அறிந்துகொள்ள முடியும். வாக்களிக்கும் பட்டனை அழுத்திய உடனே, வி.வி.பேட் எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 விநாடிகள் வரை பார்க்கலாம்.

குறை சொல்வது சரியல்ல

இதனால் வாக்காளர் களுக்கு எந்த குழப்பமும் இருக்காது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வருவதற்கு முன்பு, பெயர், வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 3½ கோடி வாக்காளர்களுக்கு மின்னணு வாக்கு எந்திரம், வி.வி.பேட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முறை 2.3 கோடி வாக்காளர்களுக்கு இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மின்னணு வாக்கு எந்திரங்களை குறை சொல்வது சரியல்ல.

உயர்மட்டதொழில்நுட்பங்கள்

இந்த எந்திரங்களில் எந்த தவறும் செய்ய முடியாது. உயர்மட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த வாக்கு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால் எந்த வகையிலும் இந்த எந்திரங்களில் திருத்தம் செய்ய முடியாது.

இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள், மிகுந்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது. எந்தெந்த வாக்கு எந்திரங்கள், வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பது முன்னரே முடிவு செய்யப்படுகிறது.

சாத்தியம் இல்லை

அதனால் வாக்கு எந்திரங்களை மாற்றுவது அல்லது அதில் ஏதாவது தவறு நடைபெற சாத்தியம் இல்லை.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

Next Story