சுமலதாவின் வெற்றியை தடுக்க முயற்சி நான் மண்டியாவின் மருமகன் அல்ல; மகன் நிகில் மீது அபிஷேக் அம்பரீஷ் மறைமுக தாக்கு


சுமலதாவின் வெற்றியை தடுக்க முயற்சி நான் மண்டியாவின் மருமகன் அல்ல; மகன் நிகில் மீது அபிஷேக் அம்பரீஷ் மறைமுக தாக்கு
x
தினத்தந்தி 30 March 2019 4:45 AM IST (Updated: 30 March 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

சுமலதாவின் வெற்றியை தடுக்க கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய அபிஷேக் அம்பரீஷ், நான் மண்டியாவின் மருமகன் அல்ல, மகன் என நிகிலை மறைமுகமாக சாடினார்.

மண்டியா, -

சுமலதாவின் வெற்றியை தடுக்க கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய அபிஷேக் அம்பரீஷ், நான் மண்டியாவின் மருமகன் அல்ல, மகன் என நிகிலை மறைமுகமாக சாடினார்.

வாக்குேசகரிப்பு

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர்கள் யஷ், தர்ஷன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுபோல் சுமலதாவின் மகனான அபிஷேக் அம்பரீசும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா மரலிக கிராமத்தில் அபிஷேக் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பணம் வினியோகம்

காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சியினர், தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற பயத்தில் உள்ளனர். அதனால் தான் சுமலதாவுக்கு எதிராக அவரது பெயரை கொண்ட 3 பேரை மண்டியாவில் நிறுத்தியுள்ளனர். இது கூட்டணி கட்சியினரின் தேர்தல் யுக்தி. இருப்பினும் போட்டியில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.

வருகிற 18-ந்தேதி நடைபெறும் தேர்தலின் போது யார் திருடர்கள் என்பது தெரியவரும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து வருகிறார்கள். ஆனால் எங்களிடம் பணம் இல்லை. எங்களிடம் அன்பு மட்டுமே உள்ளது.

சுமலதாவின் வெற்றியை தடுக்க முயற்சி

மண்டியாவில் சுமலதா போட்டியிடாமல் தடுக்கவும், அவரது வெற்றியை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமலதாவுக்கு சின்னம் ஒதுக்குவதிலும் சிலர் குழப்பம் ஏற்படுத்தினர். ஒரு பெண் அதிகாரத்துக்கு வருவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கு வாக்காளர்கள் தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.

நான் மண்டியாவுக்கு இன்று நேற்று வரவில்லை. நான் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மண்டியாவுக்கு வரவில்லை. நான் மண்டியாவின் மருமகன் அல்ல. நான் மண்டியாவின் மகன். (அதாவது நிகில் குமாரசாமி தனது தேர்தல் பிரசாரத்தின் போது, நான் மண்டியாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வேன். இதன் மூலம் நான் மண்டியாவின் மருமகன் ஆகிவிடுவேன் என கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அபிஷேக், நிகிலை மறைமுகமாக தாக்கி பேசினார்).

சிலர், மண்டியா மக்கள் தங்களுக்கு ஓட்டுப்போட்டால் தான் அம்பரீசின் ஆன்மா சாந்தியடையும் என்று கூறி வாக்கு கேட்கிறார்கள். அவர்களது கணக்கு பற்றி எனக்கு புரியவில்லை. அவர்கள் கூறுவதை நீங்கள் நம்பாதீர்கள். நீங்கள் எனது தாய் சுமலதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் மாற்றத்தை கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story