திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஏ.டி.எம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.20 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.20 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கோவிந்தபிரபாகர் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3.45 மணிக்கு காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.
அந்த வாகனத்தில் ரூ.20 லட்சம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த திருப்பூர் காலேஜ் ரோடு ஜவான் நகரை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவரிடம் விசாரித்தனர். அவர், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக தான் பணியாற்றி வருவதாகவும், அந்த நிறுவனம் திருப்பூரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருவதாகவும், ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் பிரபுவிடம் அறிவுறுத்தியுள்ளனர்.