மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் திருப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு
மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். அவர் திருப்பூர் கொங்குநகர் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
புஷ்பா ரவுண்டானாவில் பிரசாரத்தை தொடங்கிய அவர், ராம்நகர், ராமையா காலனி, லட்சுமிநகர், பிரிட்ஜ்வே காலனி, கொங்கு மெயின் ரோடு, கோல்டன்நகர், அப்பாச்சிநகர், ரங்கநாதபுரம், ஏ.டி.காலனி, புதுராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
திருப்பூரில் பின்னலாடை தொழிலில் உள்ள சிரமங்களை நீக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏற்கனவே ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறோம். கோவை விமான நிலையத்தை முழுமையாக விரிவுபடுத்தி சர்வதேச அளவில் செயல்படுத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்ல எளிதாக இருக்கும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை அ.தி.மு.க. அரசு தான் நிறைவேற்றி இருக்கிறது. திருப்பூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 4–வது குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தி பக்கவாட்டு சுவர் எழுப்பி பாதுகாக்க ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை ஒழிப்பு திட்டத்தின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் வெற்றி பெற்றால் பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக கேட்டு அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது வேட்பாளருடன் எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், ஜெ.தீபா அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.செந்தில்குமார், முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், பகுதி நிர்வாகிகள் கணேஷ், கருணாகரன், பட்டுலிங்கம், த.மா.கா. மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ரவிக்குமார், செழியன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.