நாக்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு


நாக்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் நானா படோலே குற்றம் சாட்டியுள்ளார்.

நாக்பூர், 

நாக்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் நானா படோலே குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்கட்ட தேர்தல்

நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வரும் 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி நிதின் கட்காரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நானா படோலே எம்.பி. களம் காண்கிறார்.

தேர்தல் நாட்கள் நெருங்குவதால் நாக்பூர் தொகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இரண்டு பலம்வாய்ந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்பதால் அங்கு பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை.

புகார் அளித்துள்ளோம்

இந்த நிலையில் நிருபர்களை சந்தித்த நானா படோலே 2 வீடியோக்களை வெளியிட்டதுடன், பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் முழு நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட வேண்டும். ஆனால் 2 அறைகளில் கேமராக்கள் வேலை செய்யாதது எல்.இ.டி. திரையில் பார்க்கும்போது தெரிந்தது.

மேலும் இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனிடமும் மற்றும் நாக்பூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்துள்ளோம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த விவகாரத்தை நாங்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் கொண்டு வந்துள்ளோம். தேர்தல் கமிஷன் இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நானா படோலே புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

Next Story