கூட்டு பலாத்காரம் செய்ததால் பலி, சிறுமி கொலை வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்


கூட்டு பலாத்காரம் செய்ததால் பலி, சிறுமி கொலை வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 30 March 2019 5:00 AM IST (Updated: 30 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 7 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்ததால் பலியானார். இந்த வழக்கில் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

கோவை,

கோவை துடியலூர் அருகே 1-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் தனது வீட்டின் அருகே அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்கள் இருந்தன. அங்கு ஒரு டி-சர்ட்டும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் மறியலில் ஈடுபட்டனர். அதுபோன்று துடியலூர் பஸ்நிறுத்தம் முன்பும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் சிறுமியின் உடலை வாங்கி சென்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்து உள்ளது. இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 60 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். எனினும் உறுதியாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. எனவே அவர்களிடம் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைதுசெய்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியும், துப்புதுலக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு சேலம் வளர்மதி தலைமையில் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாதர் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறுமி படுகொலையை கண்டித்து வடமதுரையில் இருந்து துடியலூர் வரை பெண்கள் வாயில் கருப்பு துணியை கட்டி மவுன ஊர்வலம் சென்றனர். 

Next Story