திருமணம் செய்வதற்காக 10-ம் வகுப்பு மாணவி காரில் கடத்தல் - தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கினர்


திருமணம் செய்வதற்காக 10-ம் வகுப்பு மாணவி காரில் கடத்தல் - தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கினர்
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதற்காக 10-ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திய வாலிபர்கள் தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கினர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கெச்சானிபட்டி பகுதியில் குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண கிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது காரில் 3 வாலிபர்களும், பள்ளி சீருடையில் ஒரு மாணவியும் இருந்த னர். காரில் இருந்த பையை சோதனை செய்தபோது, திருமணத்துக்கு தேவையான பட்டு வேட்டி, சேலை, திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25) என்பவர் தனது உறவினரான 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை திருமணம் செய்ய காரில் கடத்தி சென்றதும், உதவிக்கு தனது நண்பர்களான செந்தில்குமார் (22), தாமரைச்செல்வன்(27) ஆகியோரை அழைத்து சென்றதும் தெரியவந்தது. மேலும் மாணவிக்கு நேற்று கடைசி தேர்வு ஆகும். தேர்வு எழுத சென்ற மாணவியை அவர்கள் கடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை பிடித்து காருடன் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பள்ளி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதன்பின்னர் பள்ளி மாணவியை பெற்றோர் தங்களுடன் அழைத்துச் செல்வதாக கூறினர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டதால் பிடிபட்ட வாலிபர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Next Story