“ஜெயலலிதா வழியில் முஸ்லிம் மக்களுக்கு அரணாக இருப்போம்” மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் பேச்சு


“ஜெயலலிதா வழியில் முஸ்லிம் மக்களுக்கு அரணாக இருப்போம்” மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 4:40 AM IST (Updated: 30 March 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வழியில் முஸ்லிம் மக்களுக்கு அரணாக இருப்போம் என்று மதுரை அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் பேசினார்.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கடந்த 25–ந் தேதி முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி வெற்றி பெற்று என்ன செய்வேன் என்பது குறித்தும் பிரசாரம் செய்கிறார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

கடச்சனேந்தல், கொட்டாம்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த அவர் நேற்று மேலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார். மேலூர் ஒன்றிய பகுதியில் உள்ள புதுசுக்காம்பட்டி, நாவினிபட்டி, கீழையூர், அம்மன் கோவில்பட்டி, கீழவளவு, வச்சம்பட்டி, பாப்பகுடிப்பட்டி, இளுப்பபட்டி, சுமதிபுரம், செம்மினிப்பட்டி, வடக்குவலையபட்டி, சருகுவலையபட்டி, இடையவாசல், நடுப்பட்டி, வெள்ளளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலூர் சந்தைபேட்டை பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்கள் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர்கள் மத்தியில் ராஜ்சத்யன் பேசியதாவது:–

தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவம், முஸ்லீம் உள்பட சிறுபான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. ரமலான் நோன்பின் போது, அரிசி வழங்குவதற்கு திட்டம் தந்தது போன்ற பல்வேறு திட்டங்களை சிறுபான்மையினருக்கு வழங்கியது ஜெயலலிதா தான். அவர் சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்தார். அதே போல் தான் ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்து வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வமும் முஸ்லீம் மக்களுக்கு அரணாக இருக்கின்றனர். ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.750 கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டு, வக்புவாரியத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மசூதிகளை புனரமைப்பு செய்ய அதிக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்களுக்கு சைக்கிள் திட்டம், உலமாக்களுக்கு பென்சன் வழங்கிய ஒரே அரசு, ஜெயலலிதா அரசு தான். எனவே முஸ்லீம் மக்கள் அனைவரும் அ.தி.மு.க. ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story