தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழையை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி


தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழையை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 30 March 2019 4:43 AM IST (Updated: 30 March 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். 2020–ம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போர்க்கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமி‌ஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நம் நாட்டில் மக்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால், 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2025–ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன யுத்திகளை மத்திய, மாநில அரசுகள் கையாள வேண்டும். செயற்கை மழைக்காக பல்வேறு நாடுகள் ஏராளமான நிதி செலவு செய்கின்றன. 1980–ம் ஆண்டில் தமிழகத்தில் செயற்கை மழை வரவழைக்க முயற்சி செய்யப்பட்டது“ என்றனர்.

பின்னர் செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏன் முயற்சி செய்யக்கூடாது. குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலோர மாவட்டங்களில் உப்பு நீர் பாசனத்தை ஏன் ஏற்படுத்தவில்லை என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை வருகிற 10–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story