தூக்கமின்மை உயிரைப் பறிக்குமா?


தூக்கமின்மை உயிரைப் பறிக்குமா?
x
தினத்தந்தி 30 March 2019 2:38 PM IST (Updated: 30 March 2019 2:38 PM IST)
t-max-icont-min-icon

தினமும் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கும், விரைவான மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 30 லட்சம் மக்களைக் கொண்டு நடத்தப்பட்ட 17 ஆய்வுகளை ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்சினை, சர்க்கரை நோய், வாழ்நாள் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு எச்சரிப்பதற்கு நேர் எதிராக இந்த ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன.

தூக்கமின்மையை அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியாது. ஆனால், இரவில் நீங்கள் உறங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வழிமுறைகள் உள்ளன.

பகல்பொழுதில் தீவிரமாக உடற்பயிற்சிகளைச் செய்து உங்களை சோர்வாக்குவதும், நீங்கள் கணக்கில்லாமல் குடிக்கும் காபியை கட்டுப்படுத்துவதும் உங்களுக்கு உறக்கம் ஏற்படுத்துவதற்கு உதவலாம் என்று இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு கூறுகிறது.

அதுமட்டுமின்றி, புகைபிடிப்பது, அதிகளவு உண்பது, மதுபானம் அருந்துவது ஆகியவை ஒருவரது உறக்கத்துக்குத் தடையாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.

நம் மனதில் பெரும்பாலான நேரங்களில் மேலோங்கியுள்ள விஷயங்களை குறித்து வைத்து அவற்றைத் தீர்க்க முயற்சிப்பது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்வது போன்றவற்றையும் முயற்சித்துப் பார்க்கலாம்.

‘‘தூக்கமின்மையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாட்களில் நான் வெளியே செல்வதற்கே அச்சமடைவேன். சோர்வாகவும், மன உளைச்சலுடனும் இருக்கும் அச்சமயத்தில், எனது பிரச்சினையை வேறு யார் மேலாவது திணித்துவிடுவேன் என்ற பயமே அதற்குக் காரணம்’’ என்று 29 வயதாகும் எழுத்தாளரான அல்மரா அப்கரியன் கூறுகிறார்.

மிகவும் அரிதாக சில நாட்களில் ஆறு மணிநேரம் உறங்கினாலும், மனக்கவலைகள், மன அழுத்தத்தின் காரணமாக இரவு முழுவதும் இடையிடையே எழுந்து சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அது தனது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

‘‘தூக்கமின்மையால் ஏற்படும் உடல்சோர்வின் காரணமாக தேவையான நேரத்தில் முழுத் திறனுடன் செயல்பட முடியவில்லை. அதாவது, தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகளால், மனதுக்குப் புத்துணர்வைத் தரும் நண்பர்களுடனான சந்திப்பைக் கூட அடிக்கடி மேற்கொள்ள முடிவதில்லை’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

‘‘தூக்கமின்மையின் காரணமாக ஏற்படும் நீண்டகாலப் பிரச்சினைகளை எண்ணி நீங்கள் வருந்துகிறீர்களா?’’ என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இது தொடர்ந்து நீடிக்காது என்று நம்புகிறேன்’’ என அல்மரா கூறுகிறார்.

தொடக்கத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் தூக்கமின்மை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தினசரி வாழ்வின் வழக்கமாகி விடுவதாக அல்மராவும், மற்றவர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

Next Story