உலகிலேயே வாழச் சிறந்த நகரம் எது தெரியுமா?
உலகிலேயே வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
மெர்சர் என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் தயாரித்த இப்பட்டியலில், போக்குவரத்து நெரிசலின் அளவு, கலாசாரத் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அரசியல் மற்றும் சமூகச் சூழல், பொழுதுபோக்கு என்பது போன்ற 10 தலைப்புகளில் நகரங்கள் வகைப்படுத்தப்பட்டன.
உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த 231 நகரங்கள் பட்டியலில், சிறந்த நகரங்களில் ஆஸ்திரியாவுக்கு அடுத்த இரண்டாமிடத்தை சுவிட்சர்லாந்தின் சூரிச்சும், மூன்றாமிடத்தை கனடாவின் வான்கூவரும் பிடித்திருக்கின்றன. 4, 5, 6-ம் இடங்களில் முறையே ஜெர்மனியின் மியூனிச், டசல்டார்ப், பிராங்பர்ட் நகரங்கள் உள்ளன. 7, 8, 9-ம் இடங்களை முறையே கோபன்ஹேகன் (டென்மார்க்), ஜெனீவா, பேசல் (சுவிட்சர்லாந்து) நகரங்கள் பிடித்திருக்கின்றன. ‘டாப் 10’-ல் கடைசி இடத்தை ஆஸ்திரேலியாவின் சிட்னி பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கும் நகரங்கள், வாழத் தகுதியில்லாதவை என்று கூறலாம்.
அந்த வகையில் முதலிடத்தைப் பெற்றிருப்பது, ஈராக் தலைநகர் பாக்தாத். அதற்கு அடுத்த இடங்களில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்குய், ஏமன் நாட்டின் சானா, ‘சாட்’டின் என்டிஜமேனா, சிரியாவின் டமாஸ்கஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன.
ஹைதியின் போர்ட் அவு பிரின்ஸ், சூடானின் கார்டோம், காங்கோவின் கின்ஷாஷா, பிரேசாவில்லி ஆகியவையும் மோசமான நகரங்களின் ‘டாப் 10’-ல் இடம்பிடித்திருக்கின்றன.
ஒட்டுமொத்தப் பட்டியலில் 105-வது இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தைப் பெற்றிருப்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.
வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் சென்னையை விட்டு வெகுவாக தள்ளித்தான் பிற இந்திய நகரங்களான பெங்களூரு (149), மும்பை (154), புதுடெல்லி (162) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story