21 வேட்பாளர்கள் போட்டியால் கடலூர் தொகுதிக்கு கூடுதலாக 1,923 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
21 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 1,923 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
கடலூர்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ‘வி.வி.பேட்’ கருவியும் பயன்படுத்தப்பட உள்ளது.
அதன்படி இந்த தொகுதிக்கு தேவையான 1,923 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1957 வி.வி.பேட். கருவிகளும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. அவை அனைத்தும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான இறுதி வேட்பாளர் பட்டியல் படி கடலூர் தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு எந்திரம் வைக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
ஏனெனில் ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 15 வேட்பாளர்களுக்குரிய சின்னங்கள் மற்றும் ஒரு நோட்டாவுக்குரிய சின்னம் என மொத்தம் 16 சின்னங்களை மட்டுமே பொருத்த முடியும். ஆனால் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 1,923 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவற்றை இத்தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பு செல்வன் தலைமையில் நேற்று காலையில் நடைபெற்றது. அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், தாசில்தார் பாலமுருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story