பண்ருட்டி பகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
பண்ருட்டி பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் (தனி) ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடலூர் தொகுதியில் நடைபெறும் தேர்தலை பார்வையிடுவதற்காக தேர்தல் பொது பார்வையாளராக ஜி.பி.பட்டேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பொது பார்வையாளரான ஜி.பி.பட்டேல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதள வசதி உள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து திருவதிகை உள்பட பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பட்டேல் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜஸ்ரீ, தாசில்தார் கீதா, துணை தாசில்தார்கள் தனபதி, சிவக்குமார், மோகன், செந்தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story