தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான 39 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் ஆசியா மரியம் பேட்டி


தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான 39 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் ஆசியா மரியம் பேட்டி
x
தினத்தந்தி 30 March 2019 11:15 PM GMT (Updated: 30 March 2019 6:52 PM GMT)

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக வந்திருந்த 39 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் பொதுப்பார்வையாளராக வாணி மோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை 94999 75131 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். காலை 9 மணி முதல் 10 வரை அவரை நேரில் சந்திக்கலாம்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தபால் ஓட்டு போடுபவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்து கொண்டு இருக்கிறோம். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதே தொகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி மையத்திலேயே வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிற தொகுதிக்கு தேர்தல் பணிக்கு செல்பவர்களும் தபால் ஓட்டு போடுவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படும்.

இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் ரூ.55 லட்சத்து 30 ஆயிரத்து 500-ம், 37 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ரூ.50 லட்சம் மற்றும் தங்கம் முழுவதும் விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் தங்கம் பறிமுதல் தொடர்பான 25 வழக்குகளில் 20 வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சியினரின் 19 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ‘சி-விஜில்’ என்ற ஸ்மார்ட் போன் செயலியில் வந்த 21 புகார்கள் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலம் 18 புகார்கள் என மொத்தம் 39 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story