தே.மு.தி.க. பிரமுகர் கொலையில் உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரம்


தே.மு.தி.க. பிரமுகர் கொலையில் உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 31 March 2019 5:30 AM IST (Updated: 31 March 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. பிரமுகர் கொலையில் உறவுக்கார பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். நிலம் விற்ற பணத்தை தராமல் ஏமாற்றியதால் மகனை ஏவி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

பூந்தமல்லி,

சென்னை பாடி, சக்தி நகரை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 45). தே.மு.தி.க. பிரமுகரான இவர், 28-ந்தேதி காலை தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம கும்பல், பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆர்ச் வினோத் என்பவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டிலும், கவுதம், பிரகாஷ், நரசிம்மன் ஆகியோர் சென்னை எழும்பூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட ஆர்ச் வினோத்தின் தாயார் லதா(54), சிவா என்ற கரண்ட் சிவா(24), ஜெயசீலன்(26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

அமைந்தகரையை சேர்ந்தவர் லதா. இவர், கொலையான பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார். இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் விற்பனை செய்து கொடுத்தார். ஆனால் நிலம் விற்றதில் கிடைத்த ரூ.35 லட்சத்தை பாண்டியன் லதாவிடம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

லதாவின் மகன் ஆர்ச் வினோத், தான் புதிதாக கார் வாங்கவேண்டும். அதற்கு முன் பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டபோதும் பாண்டியன் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் பாண்டியனை தீர்த்துக்கட்டவேண்டும் என்று லதா, அவருடைய மகன் ஆர்ச் வினோத்திடம் கூறினார்.

இதையடுத்து ஆர்ச் வினோத், தனது கூட்டாளிகளுடன் பாண்டியனை கொலை செய்ய மூன்று முறை முயற்சி செய்தும், அதில் இருந்து அவர் தப்பி விட்டார். இதையடுத்து அவரது வீட்டின் அருகேயே வைத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

இதற்காக கூட்டாளிகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து, பாண்டியன் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாட வைத்து அவரது நடமாட்டங்களை கண்காணித்து அவ்வப்போது செல்போன் மூலம் தகவல் சொல்ல வைத்தனர்.

அதன்படி சம்பவத்தன்று மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது வழிமறித்து கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், அரிவாளால் ஓட, ஓட விரட்டி வெட்டியும் கொலை செய்தனர். பின்னர் ரத்தம் படிந்த அரிவாளுடன் வீட்டுக்கு சென்ற ஆர்ச் வினோத், அதை தனது தாயார் லதாவிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்கி உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைதான லதா உள்பட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோர்ட்டில் சரண் அடைந்த ஆர்ச் வினோத் உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Next Story