சேலம் அருகே கல்லூரி மாணவியுடன் பெற்றோர் தற்கொலை காதல் விவகாரத்தால் விபரீதம்


சேலம் அருகே கல்லூரி மாணவியுடன் பெற்றோர் தற்கொலை காதல் விவகாரத்தால் விபரீதம்
x
தினத்தந்தி 31 March 2019 5:00 AM IST (Updated: 31 March 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே கல்லூரி மாணவியுடன் பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். காதல் விவகாரத்தால் நடந்த இந்த விபரீத சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43), டேங்கர் லாரி டிரைவர். இவருடைய மனைவி சாந்தி (32). இவர் சந்தியூர்-ஆட்டையாம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்தனர்.

இவர்களின் மகள் ரம்யா லோஷினி(19), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து இருந்தார். மகன் தீனதயாளன்(17), 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, தீனதயாளனை அவனது பெற்றோர் இன்று ஒரு நாள் மட்டும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குமாறு கூறி உள்ளனர். உடனே அவனும் தனது பாட்டி வீட்டுக்கு சென்று தூங்கினான். பின்னர் நேற்று காலையில் அவன் பாட்டி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்தான்.

வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கவே தீனதயாளன் சத்தம் போட்டு அழைத்தும் கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தான். அப்போது தனது பெற்றோரும், அக்காளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

உடனே அவன், ‘அம்மா, அப்பா, அக்கா‘ என்று கூச்சல் போட்டு கதறவே, அருகில் வசிப்பவர்கள் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அங்கு ராஜ்குமார் சேலையாலும், சாந்தியும், ரம்யா லோஷினியும் நைலான் கயிற்றாலும் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டு இருந்தனர். இதனால் அந்த வீட்டின் முன்பு உறவினர்களும், பொதுமக்களும் திரண்டனர்.

இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ராஜ்குமார் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்களிடம் உள்ள நகை மற்றும் வங்கியில் உள்ள பணம் எங்கள் மகனுக்கே சொந்தம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே கடன் தொல்லை பிரச்சினையால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் கல்லூரி மாணவியான ரம்யா லோஷினி யாரையாவது காதலித்து அந்த பிரச்சினையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு தற்கொலை முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கல்லூரி மாணவி ரம்யா லோஷினி வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்துக்கு தந்தை ராஜ்குமாரும், தாயார் சாந்தியும் எதிர்ப்பு தெரிவித்து வந்து இருக்கலாம். இது தொடர்பாக பேசி முடிவு எடுக்க வேண்டும் என்பதால் மகனை பாட்டி வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு இரவில் அவர்கள் 3 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கலாம்.

ஒரு கட்டத்தில், இந்த காதல் விவகாரத்தால் குடும்ப மானம் போகும் முன்பு நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தாயும், மகளும் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். அதை பார்த்து ராஜ்குமாரும் சேலையால் தூக்குப்போட்டு இறந்திருக்கலாம்.

எனவே தற்போதைய நிலையில் மாணவியின் காதல் விவகாரத்தால் பெற்றோர், மகளுடன் தற்கொலை செய்யும் விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று தான் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அதே நேரத்தில் காதல் விவகாரத்தால் மாணவியை பெற்றோரே தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து விட்டு அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தான் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story