சொத்து பிரச்சினையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கடத்தல் தாய்-மகன்கள் கைது


சொத்து பிரச்சினையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கடத்தல் தாய்-மகன்கள் கைது
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

சொத்து பிரச்சினையில் அரசு பள்ளி தலைமைஆசிரியரை கடத்திய தாய், மகன்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த விச்சூர் மூலவயல் கிராமத்தை சேர்ந்தவர் சூசைமனோகர் (வயது 52). இவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டி அரசு நடுநிலைபள்ளியில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கந்தர்வகோட்டையில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இவருக்கும், இவரது உறவினரான மூலவயல் கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி (57) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சூசை மனோகர் விச்சூர் மூலவயல் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த குழந்தைசாமியின் மகன்களான சுரேஷ் (32), கண்ணன்(30), எட்வின் (27) ஆகிய 3 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வைத்து சூசை மனோகரை கடத்தி சென்றனர். அப்போது சூசை மனோகர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் விரைந்து சென்று கரகத்திக்கோட்டை பகுதியில் அவர்களை மறித்து சூசை மனோகரை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், கண்ணன்,எட்வின் மற்றும் இவர்களது தாய் ராஜகன்னி (51) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமை ஆசிரியரை எதற்காக கடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story