பாளையங்கோட்டையில் தேர்தல் திருவிழா: 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் கலெக்டர் ஷில்பா வலியுறுத்தல்
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை,
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா வலியுறுத்தி உள்ளார்.
தேர்தல் திருவிழா
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் திருவிழா என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் வாக்காளர் விழிப்புணர்வு கோலங்கள் போடப்பட்டிருந்தன. ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களால் தேர்தல் ஆணைய சின்னம் போன்று வரிசையாக நின்று வெளிப்படுத்தினர்.
கலெக்டர் ஷில்பா தலைமையில் வாக்காளர் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டதுடன், விழிப்புணர்வு பாடல்கள் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பறையாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், மாடு ஆட்டம், கழியல் ஆட்டம் உள்பட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
100 சதவீதம் வாக்குப்பதிவு
இதுகுறித்து கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 74 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக புதிய தலைமுறையினர், இளைஞர்கள், 18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டுப்போட முன்வர வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஓட்டுப்போட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த தேர்தலில் கிராமப்புறங்களில் அதிக ஓட்டு பதிவாகி உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகும் வகையில் அனைவரும் ஓட்டுப்போட முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) சுகபுத்ரா, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, தேர்தல் செலவின பார்வையாளர்கள் எபனேசர் ராஜ்கோஸ், மணி, சஞ்சய் பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story